குறுந்தொகையோடு ஒரு காலப் பயணம் (பாடல்கள் 1 முதல் 100 வரை) பாகம் – 1 – கிருபாகரன் (Kurunthogaiyodu Oru Kala Payanam (Poems t to 100) Part 1 M. Kirubakaran)
ஒவ்வொரு குறுந்தொகை பாடலுக்கும் இணையாக ஒன்றிரண்டு திரைப்பாடல்களை மேற்கோளாகக் காட்ட ஆரம்பித்த முதல் முயற்சி, திருமதி வைதேகி அவர்களின் சங்கப் பதிவுகளின் உதவியால், சங்க காலம் தொட்டு இன்றைய தமிழ் இலக்கியம் வரை என விரிவடைந்தது. மற்ற சங்க நூல்களின் பாடல்கள், திருக்குறள், திருக்குறளுடன் சில அகம் சார்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், கம்ப ராமாயணம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், முத்தொள்ளாயிரம், பாண்டிக்கோவை, நந்திக் கலம்பகம், கலிங்கத்துப் பரணி, நளவெண்பா, திருப்புகழ், அபிராமி அந்தாதி, ராமலிங்க அடிகளார் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள் துணை கொண்டு, இன்றைய கால நிலைக்கு ஒப்பிட ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும் இடம் பெற்று, ஒவ்வொரு குறுந்தொகை பாடலின் கருத்தினை, கருவினை விவரிக்கும் முயற்சி இது. குறுந்தொகை பாடல்களின் 2000 ஆண்டு காலப் பயணமாக தமிழ் இலக்கியத்தை அறியாதவர்க்கு அறிமுகப்படுத்தும் முயற்சி இது. இந்த குறுந்தொகைப் பாடல்கள் பல இலக்கிய, திரைப்பாடல்களை எனக்கு நினைவுறுத்த, நாம் ஏன் ஒவ்வொரு பாடலையும், அவற்றோடு தொடர்பு கொண்டவை எனக் கருதும் பல்வேறு இலக்கிய, திரைப்படப் பாடல்களின் கோவையாக இந்த நூலை உருவாக்கக் கூடாது என்று கருதியதால் உருவான முயற்சி இது. ஒவ்வொரு குறுந்தொகை பாடலுக்கும் ஒரு மையக் கருத்தினை நிலை நிறுத்தி, சங்கக் காலப் பாடல்கள் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்கள்) தொடங்கி இன்றைய திரைப்பாடல்கள் வரை, பாடல்கள் கோர்வையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. திருமதி வைதேகி அவர்கள் சங்கப் பாடல்களை விளக்கும்போது, அப்பாடல்களை முழுவதும் அறிந்திட நாம்தான் அக்காலத்திற்கு சென்று அவற்றைப் படித்து புரிந்துகொள்ள வேண்டும், இக்காலத்து வாழ்வு முறை, மரபு கொண்டு அவற்றின் பொருள் அறிதல் கூடாது என்பார். இப்பாடல்களின் கோர்வை துணைக் கொண்டு ஒரே கருத்து வெவ்வேறு காலக் கட்டங்களில் எப்படி கையாளப்பட்டுள்ளது என்பதைக் கூறுவதே இதன் நோக்கம். திரைப்பாடல்கள் துணைக் கொண்டு, பின் நோக்கிக் காலப் பயணம் செய்து குறுந்தொகை காலத்தை அடையலாம், அல்லது குறுந்தொகைப் பாடல் துணை கொண்டு இக்காலத்து திரைப்பாடல்கள் வரை பயணம் செய்யலாம். இந்த பயணத்தின் மூலம், மனித உணர்வுகள் அன்றும், இன்றும் என்றும் ஒன்றே, அக இலக்கணத்து, களவு, கற்பு நிகழ்வுகள் அக்காலம் தொட்டு இன்று வரை ஒன்றே என்பதை அறியலாம். சில மாறுதல்கள் இருக்கலாம் இன்றைய காலக் கட்டத்தில், இன்று கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா… இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா… – திரைப்படம்: சாமி, பாடல்: கல்யாணம்தான், பாடலாசிரியர்: சினேகன் போன்ற பாடல்கள் சமூகத்திற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன், இயற்கைப் புணர்ச்சியும், உடன் போக்கும் தமிழ் சமூகத்திற்கு ஏற்புடையதே. சங்க இலக்கியம் என்றாலே, தமிழ் நன்கு படித்து அறிந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்கிற கருத்தினைப் பொய்த்திட வேண்டும் என்பதற்கான சிறுமுயற்சி இது. தமிழ் இலக்கியம் அகத்தையும், புறத்தையும் பற்றிக் கூறுகிறது. இந்த உணர்வுகள் அன்றும், இன்றும், என்றும் மாறாத உணர்வுகள். அப்படியிருக்க, 2000 ஆண்டுகளுக்கு முன்னும், அதைத் தொடர்ந்தும் உருவாகிய தமிழ் இலக்கியங்கள் என்றும் படிப்பவர்க்கு இன்பம் அளிப்பவையே. ‘குலைக் காந்தட்டே‘ என முடியும் குறுந்தொகையின் முதல் பாடல் காந்தள் மலர் பற்றிப் பேசிட, மலர்களைப் பெண்களோடு ஒப்பிடும் மற்ற தமிழ் இலக்கியப் படலகளோடு ஒப்பிட்டு, கபிலரின் குறிஞ்சிப் பாட்டின் வரிகளையும் நினைவுறுத்தி இப்பாடல் விவரிக்கப்பட்டுள்ளது. ‘படப்பை வேங்கைக்கு‘ தூது சொல்ல மறந்த தலைவனைத் தலைவி கடியும் பாடல் (குறுந்: 266) விவரிக்க, மரங்களையும் உறவாகக் கொண்டாடிய மற்ற இலக்கியப் பாடல்களோடு, தேவார திருவோத்தூர் கோவில் மரப் (தலவிருட்சம்) பாடல் ஒன்றும் கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது. ‘நேற்று வரை நீ யாரோ நான் யாரோ‘ எனும் திரைப்பாடல் கொண்டு ‘செம்புலப் பெயல் நீர்‘ பாடல் (குறுந்: 40) விளக்கப்பட்டு, நட்பு, கடவுள் பால் பூண்ட அன்பு பற்றிய மற்ற பாடல்களும் இப்பாடலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. – நூலாசிரியர்: கிருபாகரன்
AI Readiness
Good foundation, but some important product data is still missing.