போருக்குப் பிந்திய அரசும் சமூகமும்
பின்-யுத்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடும் செயன்முறைகள் தொடர்பான ஆக்கங்கள் பெருமளவிற்கு ஆங்கில மொழியிலேயே இடம்பெறுகின்றன. முக்கியமாகத் தமிழ் மொழியில் இவ்வாறான வெளியீடுகள் மிகவும் குறைவாகவே நடைபெறுகின்றன. அந்தவகையில் போருக்குப் பிந்திய அரசும் சமூகமும்: இலங்கையின் அனுபவங்கள் எனும் இந்நூல் முக்கியமான ஒரு பங்களிப்பாகப் பார்க்கப்பட வேண்டும். பின்-யுத்தகால பிரச்சினைகள் பலவும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டியதாகும். அவ்வகையில் பின்-யுத்தகால அபிவிருத்தி, நிலைமாற்று நீதி, இன நல்லிணக்கம் உள்ளடங்கலான பல பிரச்சினைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவை பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் யாவருக்கும் பயனளிக்கும் என்று கருதுகின்றேன். பேராசிரியர் எஸ். ஐ. கீதபொன்கலன் இந்த நூல் ‘போருக்குப் பிந்திய அரசும் சமூகமும்’ குறித்த இலங்கையின் அனுபவங்களைப் பேசுகின்றது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மிக முக்கிய பாத்திரமான இனம் பற்றிய உரையாடல்கள் பலவிதங்களில் இந்நூலில் நோக்கப்படுகின்றன. யுத்தத்திற்குப் பின்னரான பன்மைத்துவம், இன நல்லிணக்கம் என்பன கையாளப்படுகின்ற விதத்தினைக் கற்றுக்கொண்ட பாடங்களினூடாக இந்நூல் விபரிக்கின்றது. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் ஆள்புலம் பற்றிய கரிசனை இந்நூலில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. குறிப்பாக சிறுபான்மையினரை அரச முறைமைக்குள் உள்ளீர்த்தலில் காணப்படும் சவால்களை முழு வீச்சுடன் நோக்கும் கட்டுரையையும் இப்பதிப்பு கொண்டிருக்கின்றது. இவ்வாறு இலங்கையின் யுத்தத்திற்குப் பிந்திய அரசியல், சமூக, பொருளாதார, இலக்கியம் சார் அம்சங்களைப் பல்வேறு கோணங்களில் பார்க்கின்ற இப்பதிப்பு நமது மக்களின் வாழ்வினைச் சீர்மைப்படுத்தவும் மகிழ்ச்சிப்படுத்தவும் உதவக்கூடிய ஒன்றாகும்.
AI Readiness
Good foundation, but some important product data is still missing.